ஒரிசா கலவரம்: ம.பு.க. விசாரணைக்கு கிறித்தவர்கள் கோரிக்கை!
புதன், 19 நவம்பர் 2008 (11:25 IST)
ஒரிசாவில் கிறித்தவர்கள் மீதும் தேவாலாயங்களின் மீதும் நடத்தப்பட்டுள்ள தாக்குதல்கள் தொடர்பாக மத்தியப் புலனாய்வுக் கழகத்தின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அகில இந்திய கத்தோலிக்கர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அச்சங்கத்தின் தேசியத் தலைவர் ரெமி ஒய் டேனிஷ், கந்தமால் மாவட்டத்தில் வாழும் கிறித்தவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதால், அங்கு மத்தியப் படைகளை வாபஸ் பெறக் கூடாது என்று வலியுறுத்தினார்.
இச்சம்பவம் தொடர்பாக மத்தியப் புலனாய்வுக் கழகத்தின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி பிரதமர், குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே மனு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்குச் செல்ல அரசு சாரா நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும், கலவரத்தின்போது சேதமாக்கப்பட்ட கிறித்தவர்களின் வீடுகள், தேவாலயங்கள் ஆகியவை மீண்டும் கட்டித்தரப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.