பெட்ரோல், டீசல் விலை குறையாது: முரளி தியோரா!
வியாழன், 13 நவம்பர் 2008 (01:30 IST)
பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்குக் கட்டுப்படியாகும் வகையில் கச்சா எண்ணெய் விலை குறையும் வரை பெட்ரோல், டீசல் விலைகளைக் குறைப்பது பற்றி மத்திய அரசு பரிசீலிக்காது என்று பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா கூறியுள்ளார்.
சர்வதேசச் சந்தையில் என்றுமில்லாத வகையில் பேரல் ஒன்று 147 அமெரிக்க டாலருக்கு விற்ற கச்சா எண்ணெய் விலை தற்போது பேரல் ஒன்று 60 அமெரிக்க டாலராகக் குறைந்துள்ளது.
இதையடுத்து, பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்படுமா என்று பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோராவிடம் கேட்டதற்கு, "ரூபாய்- டாலர் மதிப்புக்களில் சரிவு உள்ளது. கச்சா எண்ணெய் விலைகளிலும் பெரும் ஏற்றத்தாழ்வு காணப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில் விலைக் குறைப்பு குறித்து முடிவெடுக்க முடியாது" என்றார்.
"பிரதமர் மன்மோகன் சிங் ஏற்கெனவே கூறியுள்ளார். அதையே நான் திருப்பிக்கூறத் தேவையில்லை. எண்ணெய் நிறுவனங்கள் பெரும் இழப்பைச் சந்தித்து வருவதால் விலைகளைக் குறைக்க முடியாது. அவற்றிற்குக் கட்டுப்படியாகும் வகையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த பிறகே மத்திய அரசு எதையும் பரிசீலிக்கும்" என்றும் அவர் கூறினார்.
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் பெட்ரோல் விற்பனையில் லாபம் ஈட்டத் துவங்கியுள்ளன. ஆனால், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, டீசல் ஆகியவற்றின் விற்பனையில் நாள் ஒன்றுக்கு ரூ.155 கோடி இழப்பைச் சந்தித்து வருகின்றன.
பெட்ரோல் விற்பனையில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.4.12 லாபம் ஈட்டத் துவங்கியுள்ள எண்ணெய் நிறுவனங்கள், டீசல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.0.96, மண்ணெண்ணெய் விற்பனையில் லிட்டருக்கு ரூ.22.40, சமையல் எரிவாயு விற்பனையில் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.343.49 என்றவாறு இழப்பைச் சந்திக்கின்றன.