தேசிய நதியாகிறது கங்கை!

புதன், 5 நவம்பர் 2008 (02:23 IST)
பழம்பெருமை வாய்ந்த கங்கை நதியை தேசிய நதியாக அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் கங்கையை மாசு மற்றும் குப்பை கூளம் ஏற்படுவதில் இருந்து பாதுகாப்பதற்காக உயர் அதிகாரம் கொண்ட கங்கை ஆற்றுப்படுகை ஆணையம் ஒன்றை அமைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அமையவிருக்கும் இந்த ஆணையத்தில், கங்கை நதி பாய்ந்தோடும் மாநிலங்களின் முதல் அமைச்சர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்றும், இதற்கான முடிவு பிரதமர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

கங்கை நதி நடவடிக்கை திட்டம் குறித்து பிரதமர் தலைமையில் கூடிய இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதில் நீர்வள ஆதார அமைச்சர், சுற்றுப்புறச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர், நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

புதிய முறைகள் மூலம் ஆறுகளை தூய்மைப்படுத்துவதற்கு மாதிரி அமைப்பு உருவாக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தியதாகவும் அந்த வட்டாரங்கள் கூறின.

வெப்துனியாவைப் படிக்கவும்