மராட்டிய குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு பால் தாக்கரே ஆதரவு!
சனி, 1 நவம்பர் 2008 (17:23 IST)
மராட்டியம் மலேகானில் நடந்த குண்டுவெடிப்புகள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள 3 பேரை ஆதரித்துள்ள சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரே, அவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் இந்துத்துவா அமைப்புகள் பொறுப்பற்றுச் செயல்படுவதாக குற்றம்சாற்றியுள்ளார்.
மேலும், குற்றம்சாற்றப்பட்டுள்ளவர்களை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்ற சட்ட வல்லுநர்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து சிவசேனாவின் அதிகாரபூர்வ ஏடான 'சாமனா'வில் பால் தாக்கரே எழுதியுள்ள தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:
பயங்கரவாதத் தடுப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சாத்வி பிரக்யா, ஓய்வுபெற்ற மேஜர் ரமேஷ் உபத்யாய, சமீர் குல்கர்னி ஆகிய மூவரையும் ஒட்டுமொத்த இந்து சமுதாயமும் ஆதரிக்க வேண்டும்.
நமது நாட்டை பலவீனப்படுத்திடும் எந்த வகையான பயங்கரவாதத்தையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம். மலேகான் சம்பவத்தில் பலியோனோர் குறித்து நாங்கள் வருந்துகிறோம்.
ஆனால், நாடாளுமன்றம் மீதான தாக்குதல் வழக்கின் முக்கியக் குற்றவாளியான அஃசல் குருவினை இந்த நாட்டின் போலி மதசார்பின்மைவாதிகள் ஆதரிப்பார்களேயானால், நாங்கள் ஏன் சாத்வி பிரக்யா, ரமேஷ் உபத்யாய, சமீர் குல்கர்னி ஆகியோரை நினைத்து பெருமைப்படவும், அவர்களை நேசிக்கவும் கூடாது?
இந்தியாவில் உள்ள இந்துக்களைக் கொல்வதற்கு இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஒவ்வொரு நாளும் திட்டமிடுகின்றனர். அண்மையில் அஸ்ஸாமில் நடந்த குண்டு வெடிப்புகள் கூட வங்கதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்தவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
இதுபோன்றதொரு சூழலில் ஒரு சாத்வி பிரக்யா அல்லது ரமேஷ் உபத்யாய அல்லது சமீர் குல்கர்னி இருந்திருந்தால் அவர்கள் மீதும் குற்றம்சாற்றியிருக்க முடியாது.
முஸ்லிம்களை ஆதரித்து அரசியல் நடத்தும் காங்கிரஸ் கட்சி தனக்குச் சாதகமாக பயங்கரவாதத் தடுப்புப் படை இயந்திரத்தைப் பயன்படுத்திக்கொள்கிறது. படித்த நாகரீகம் மிக்க நபர்களை மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புபடுத்திக் கைது செய்வதாவது, இந்துக்களை நசுக்கி முஸ்லிம்களின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ளச் செய்யும் முயற்சிகளில் ஒன்றே ஆகும்.
இவ்வாறு பால் தாக்கரே குற்றம்சாற்றியுள்ளார்.