பள்ளிக் கல்வி அடிப்படை உரிமையாக்கும் சட்ட வரைவிற்கு அமைச்சரவை ஒப்புதல்!

வெள்ளி, 31 அக்டோபர் 2008 (13:57 IST)
6 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு பள்ளிக் கல்வியை கட்டாய, அடிப்படை உரிமையாக்கும் சட்ட வரைவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் நே‌ற்று மாலை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் நாடாளுமன்றம் மேற்கொண்ட 86வது சட்ட திருத்தத்தின்படி, பள்ளிக் கல்வியை இலவசமாகவும், கட்டாயமாகவும் பெறுவதை அடிப்படை உரிமையாக்கும் சட்ட வரைவு பரிசீலிக்கப்பட்டது.

இக்கூட்ட‌ம் கு‌றி‌த்து இ‌ன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் ப. சிதம்பரம், கல்வியை அடிப்படை உரிமையாகும் சட்ட வரைவிற்கு ஒப்புதல் அளிக்கும் சட்ட வரைவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறினார்.

அடுத்த மாதம் டெல்லி மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளதால் அதன் விவரங்களை வெளியிட முடியாத நிலை உள்ளதாகவும், சட்ட வரைவு தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்படும் என்றும், அதன் ஒப்புதல் கிடைத்தப் பிறகு பொது மக்கள் அறிந்துகொள்ள வெளியிடப்படும் என்று சிதம்பரம் கூறினார்.

இச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியப் பின்னர் அதனை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு மத்திய, மாநில அரசுகளைச் சார்ந்தது என்று ப. சிதம்பரம் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்