நாட்டை துண்டாட பிரிவினை சக்திகள் முயன்று வருகின்றன என்று பிரதமர் மன்மோகன் சிங் எச்சரித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நான்டேட்டில் சீக்கியர் விழாவில் பங்கேற்று பேசும்போது அவர் இவ்வாறு கூறினார்.
பிரிவினை உணர்வுகளைத் தூண்டி நாட்டின் வளர்ச்சியைத் தடுக்க இந்த சக்திகள் முயன்று வருகின்றன என்றும் அவர் கூறினார். நாட்டின் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் காக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மக்கள் தங்களுக்குள்ளே மோதிக் கொள்ள வேண்டும் என இந்த தீய சக்திகள் விரும்புகின்றன என்று அவர் குற்றம்சாட்டினார்.
நாட்டை எவ்வாறு முன்னேற்றுவது என்பதுதான் நமது சிந்தனையாக இருக்க வேண்டும். தோளோடு தோள் நின்று நாடு முன்னேற பாடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
நாடு வேகமாக முன்னேறினாலும் சில பகுதிகள் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. வேறு சில பகுதிகள் பிரிவினைவாத சக்திகளால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் ஒற்றமையையும் ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்த வேண்டும் என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.
எந்தவொரு அமைப்பைபோ அல்லது எந்தவொரு நிகழ்வையோ அவர் குறிப்பிடவில்லை என்றாலும் மகாராஷ்டிரத்தில் வட இந்தியர்கள் தாக்கப்பட்டு வருவதை மறைமுகமாகக் குறிப்பிடும் வகையில் பிரதமரது பேச்சு அமைந்திருந்தது.