அஸ்ஸாமில் தொடர் குண்டு வெடிப்பு: 56 பேர் பலி! 350 பேர் காயம்!!
வியாழன், 30 அக்டோபர் 2008 (19:21 IST)
அஸ்ஸாம் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான குவஹாத்தி உட்பட பல இடங்களில் அடுத்தடுத்த நடந்த தொடர் குண்டு வெடிப்புக்களில் 56 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
webdunia photo
WD
இன்று காலை 11.30 மணிக்குத் தொடங்கி 11.50 மணிவரை 13 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததாகவும், குண்டுகள் வெடித்த இடங்கள் அனைத்தும் மக்கள் அதிகம் புழங்கும் சந்தைப் பகுதிகள் என்றும் யு.என்.ஐ. செய்தி கூறுகிறது.
குவஹாத்தி நகரிலுள்ள கணேஷ்குரி என்ற இடத்தில்தான் முதலில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்துள்ளது. 50 மீட்டர் சுற்றளவில் இருந்த பலர் இதில் கொல்லப்பட்டனர். சில நிமிடங்களில் மீண்டும் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த மற்றொரு குண்டு வெடித்துள்ளது. இதில் பலர் காயமடைந்துள்ளனர் என்று அச்செய்தி கூறுகிறது.
குவஹாத்தியில் மட்டும் கணேஷ்புரி, ஃபேன்சி பஜார், பான்பஜார் ஆகிய இடங்களில் 4 குண்டுகள் வெடித்துள்ளன. இங்கு மட்டும் 25 பேர் கொல்லப்பட்டனர்.
webdunia photo
WD
கோக்ரஜார் என்ற இடத்தில் 3 குண்டுகள் வெடித்துள்ளன. போன்கைகுவான் என்ற இடத்தில் இரண்டு குண்டுகள் வெடித்துள்ளன. இதில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பர்பீட்டா சாலையில் இரண்டு குண்டுகள் வெடித்துள்ளன. இந்த குண்டுவெடிப்பில் மட்டும் 8 பேர் உயிரிழந்நதுள்ளனர்.
இத்தாக்குதலின் பின்னனியில் உல்ஃபா இயக்கம் இருக்கலாம் என்று முதலில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால் உல்ஃபா இயக்கம் மறுத்துவிட்டது. எனவே இத்தாக்குதலை வங்கதேசத்திலிருந்து செயல்பட்டுவரும் ஹூஜி என்றத் தீவிரவாத அமைப்பு நடத்தியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இத்தாக்குதல்கள் பற்றி விவரித்த அஸ்ஸாம் மாநில காவல்துறைத் துணைத் தலைமை ஆய்வாளர் ஜி.பி. சிங், அதிகம் பேர் கொல்லப்பட்ட கணேஷ்குரியில் காரில் குண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.
webdunia photo
WD
தொடர் குண்டுவெடிப்பினால் ஏற்பட்ட பாதிப்பையடுத்து கோபமுற்ற மக்கள் சில இடங்களில் காவல் துறையினருக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.