அஸ்ஸாம் குண்டுவெடிப்பு: விவரம் கோரியது மத்திய அரசு!
வியாழன், 30 அக்டோபர் 2008 (15:04 IST)
அஸ்ஸாமில் நடந்த தொடர் குண்டுவெடிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அரசு, அது தொடர்பாக திரட்டப்பட்ட விவரங்களை வழங்க மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்ட அம்மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று தெரிவித்தார்.
குண்டுவெடிப்பு தொடர்பான தகவல்களை உடனடியாக மத்திய அரசுக்கு வழங்குமாறு அஸ்ஸாம் அரசிடம் உள்துறை செயலாளர் மதுக்கர் குப்தா கோரியுள்ளதாகவும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்புக்குழு அம்மாநிலத்தின் பாதுகாப்பு நிலையை நேரில் ஆய்வு செய்யும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் ஷகீல் அகமது, தற்போதைய சூழலில் அஸ்ஸாம் குண்டுவெடிப்புக்கு காரணமானவர்கள் யார் எனக் கூற முடியாது. ஆனால் துவேஷ அரசியலில் ஈடுபட்டு வரும் சிலரே இந்த சதிச் செயலை நடத்தியுள்ளனர் என்றார்.
இந்த குண்டுவெடிப்புக்கு அனைவரும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், பிரிவினைவாத சக்திகளை தோற்கடிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றார்.