தேசிய மாநாட்டுக் கட்சி முதல்வர் வேட்பாளர் பரூக் அப்துல்லா!
வெள்ளி, 24 அக்டோபர் 2008 (02:55 IST)
ஜம்மு-காஷ்மீரில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த ஒமர் அப்துல்லா, தனது தந்தை பரூப் அப்துல்லா தான் கட்சியின் முதல்வர் வேட்பாளர் என அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரான ஒமர் அப்துல்லா ஜம்முவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போதைய கூட்டணி அரசின் தவறான ஆளுமையை மக்கள் உணர்ந்துள்ளனர். கூட்டணி என்பது கட்சிகளுக்கு வேண்டுமானால் பலனைத் தரலாம். ஆனால் மாநிலத்தின் வளர்ச்சிக்கு குறிப்பாக ஜம்மு-காஷ்மீருக்கு அது பலனளிக்காது என்றார்.
இந்த தேர்தலில் தனது தந்தையை (பரூக் அப்துல்லா) முதல் வேட்பாளராக நிறுத்தியிருந்தாலும், இத்தேர்தலில் தானும் போட்டியிட உள்ளதாக ஒமர் அப்துல்லா அப்போது குறிப்பிட்டார்.
அமர்நாத் கோயிலுக்கு வழங்கிய நிலத்தை அம்மாநில அரசு திரும்பப் பெற்றதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை மக்கள் ஜனநாயகக் கட்சி விலக்கிக் கொண்டதால், கடந்த ஜூலை 11ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், அம்மாநிலத்திற்கான தேர்தலை நவம்பர் 17 முதல் டிசம்பர் 24ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடத்துவதாக மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.