நடப்பாண்டின் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரையிலான காலத்தில் ரயில்வேத் துறை ரூ.1,877.55 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ஈட்டப்பட்ட வருவாயுடன் (ரூ.1,866.61 கோடி) ஒப்பிடுகையில் இது 0.59 விழுக்காடு கூடுதலாகும்.
சரக்குப் போக்குவரத்து வாயிலாக ரயில்வேத் துறைக்கு அக்டோபர் 1ஆம் தேதி முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை ரூ.1,227.14 கோடி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டில் இத்தொகை ரூ.1,203.91 கோடி மட்டுமே. இது 1.93 விழுக்காடு கூடுதலாகும்.
ரயில் பயணிகள் கட்டணம் வாயிலாக அக்டோபர் 1ஆம் தேதி முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை ரூ.588.45 கோடி ஈட்டப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டைவிட 7.48 விழுக்காடு அதிகமாகும். கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.547.51 கோடி மட்டுமே கிடைத்தது.
பெட்டிகள் தயாரிப்பு மூலம் கிடைத்த வருவாய் கடந்த ஆண்டு ரூ.47.40 கோடி. இது இந்த ஆண்டில் 0.68 விழுக்காடு அதிகரித்து ரூ.47.72 கோடியாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை 19.10 கோடி பேர் முன்பதிவு செய்து பயணம் செய்தனர். இந்த எண்ணிக்கை இந்த ஆண்டில் 19.33 கோடியாக உயர்ந்துள்ளது. இது 1.21 விழுக்காடு அதிகரிப்பாகும்.
புறநகர் ரயில்களில் பயணம் செய்தவர்கள் எண்ணிக்கை 11.11 கோடியில் இருந்து 10.41 கோடியாக குறைந்துள்ளது. இது 6.26 விழுக்காடு குறைவு. மற்ற ரயில்களில் பயணம் செய்தவர்கள் எண்ணிக்கை 7.99 கோடியில் இருந்து 8.91 கோடியாக அதிகரித்துள்ளது. இது 11.60 விழுக்காடு வளர்ச்சியாகும். இத்தகவல்களை ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.