தொலைபேசியில் விரும்பத்தகாத அழைப்புகள் சட்டத் திருத்தம் வெளியீடு!
செவ்வாய், 21 அக்டோபர் 2008 (17:36 IST)
தொலைபேசியில் விரும்பத்தகாத வர்த்தக அழைப்புகள் தொடர்பான சட்டத்திருத்தம் செய்யப்பட்ட விதிமுறைகளை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) இன்று வெளியிட்டுள்ளது.
தொலைபேசியில் விரும்பத்தகாத வர்த்தக அழைப்புகள் வருவதை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்தும் வகையில் 'தொலைபேசி விரும்பத்தகாத வர்த்தக அழைப்பு விதிமுறைகள் 2007 (4-2007)' என்ற சட்ட விதிமுறைகளை 'டிராய்' ஜூன் 5ஆம் தேதி வெளியிட்டது.
விதிமுறைகளை மேலும் சிறப்பாக அமல்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாதத்தில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. இதில் மேலும் சில திருத்தங்கள் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து உத்தேச சட்டத்திருத்த விதிமுறைகளை வெளியிட்டது. இது பற்றிய கருத்துக்கள், ஆலோசனைகள் பெறப்பட்டன. இதுதொடர்பாக ஆலோசனை கூட்டங்களும் நடத்தப்பட்டு, உத்தேச சட்டத் திருத்தத்தில் உரிய மாறுதல்கள் செய்யப்பட்டன. 'தொலைபேசி விரும்பத்தகாத வர்த்தக அழைப்புகள் (2-வது திருத்தம்) விதிமுறைகள்-2008' -ஐ தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.
2-வது திருத்த விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவை தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையத்தின் www.trai.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.