நிலவில் நமது தேசக் கொடி நடப்படும்: இஸ்ரோ தலைவர்!

திங்கள், 20 அக்டோபர் 2008 (20:04 IST)
நிலவை ஆய்வை செய்ய இந்திய வானியல் ஆய்வு மையம் (இஸ்ரோ) அனுப்பும் சந்திராயன்-1 விண்கலம், நமது நாட்டின் தேசக் கொடியை நிலவில் பதிக்கும் என்று இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் கூறியுள்ளார்.

நாளை மறுநாள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து துருவ செயற்கைகோள் ஏவு வாகனத்தின் (பி.எஸ்.எல்.வி.) மூலம் விண்ணில் செலுத்தப்படும் சந்திராயன் விண்கலம், நிலவில் நமது தேசக் கொடியைப் பதிக்கும் என்று கூறிய இஸ்ரோ தலைவர், இதன் மூலம் எதிர்காலத்தில், அண்டார்டிகாவைப் போல நிலவின் பரப்பும் பிரிக்கப்பட்டால் நமது நாட்டிற்கும் அதில் பங்கிருக்கும் என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

“இன்றுள்ள சர்வதேச உடன்படிக்கையின்படி, உலக சமூகத்திற்குச் சொந்தமானதாக நிலவு உள்ளது. அதன் பரப்பு மீது எந்த ஒரு நாடும் சொந்தம் கொண்டாட முடியாது. ஆனால் எதிர்காலத்தில் இந்த நிலை எப்படி மாறும் என்று சொல்வதற்கில்லை, கொடியை அங்கு பதிப்பதன் மூலம் நமது இருப்பையும் நாம் அங்கு உறுதி செய்கிறோம்” என்று மாதவன் நாயர் கூறியுள்ளார்.

நிலவில் இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகள் தங்கள் நாட்டு கொடிகளை பதித்துள்ளன. அந்தப் பட்டியலில் நான்காவது நாடாக இந்தியா இணைகிறது.

நிலவின் மீது நமது உரிமையை கோருவதன் மூலம் அங்கு பெருமளவிற்குக் கிடைக்கும் ஹீலியம்-3 எனும் அரிய கனிமத்தை பூமிக்கு கொண்டுவர முடியும். ஒரு டன் ஹீலியத்தைக் கொண்டு நமது நாட்டின் ஓராண்டிற்கான எரிசக்தித் தேவையை பெறமுடியும் என்று மாதவன் நாயர் கூறினார்.

2015ஆம் ஆண்டில் நிலவிற்கு நம்மால் மனிதனை அனுப்ப முடியும் என்று கூறிய மாதவன், அதற்கு ரூ.10,000 கோடி செலவாகும் என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்