வரும் திங்களன்று ரஷ்ய அயலுறவு அமைச்சர் செர்ஜீய் லாவ்ரோவ் இந்தியா வருகிறார். அப்போது ரஷ்யாவுடன் சமூக நலத்திற்கான அணு ஒத்துழைப்பு குறித்து இந்தியா விவாதிக்கவுள்ளது.
அணு எரிபொருள் வழங்கும் நாடுகளின் அனுமதி கிடைக்காததால் நின்று போயுள்ள கூடங்குள அணு உலை உருவாக்கத் திட்டம் குறித்த விவகாரங்களையும் இந்தியா அவருடன் விவாதிக்கவுள்ளது.
கூடங்குளத்தில் ரஷ்யா நான்கு அணு உலைகளை கட்டித் தருவதாய் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
ரஷ்ய அயலுறவு அமைச்சர் லாவ்ரோவ் இந்த விஷயங்கள் குறித்து இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜீயிடம் பேசுவார்.
2007ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியா வந்திருந்தபோது கூடங்குளத்தில் நான்கு அணு உலைகளை உருவாக்குவது பற்றிய ஒப்பந்தத்ம் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் அணு எரிபொருள் நாடுகள் அனுமதியின்மையும், இந்தியா-சர்வதேச அணுசக்தி பாதுகாப்பு முகமையுடன் உடன்பாடு ஏற்படாத காரணத்தினாலும் அந்த திட்டம் நிறைவேற்றப்படும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.
தற்போது இந்த இரண்டு விஷயங்களும் நிறைவேறியுள்ளதால், இந்த முறை இந்த அணு உலை உருவாக்கத் திட்டம் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.