நாடாளுமன்றம் இன்று கூடுகிறது!

வெள்ளி, 17 அக்டோபர் 2008 (01:35 IST)
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பலவிதமான பிரச்சனைகளுடன் இன்று தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரை சந்திக்கவுள்ளது.

மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம், மீண்டும் இன்று (வெள்ளிக்கிழமை) கூடுகிறது. அக்டோபர் 17 முதல் நவம்பர் 21 வரை இன்க்தக் கூட்டத்தொடர் நடைபெறும்.

சேது சமுத்திர திட்டம், தமிழக எம்.பி.க்கள் பதவி விலகல் தீர்மானம், இலங்கை தமிழர்கள் பிரச்சனை, ஒரிசா-கர்நாடகத்தில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல், டெல்லியில் நடந்த குண்டு வெடிப்பு உள்ளிட்ட பயங்கரவாத நடவடிக்கைகள், அணுசக்தி ஒப்பந்தம், விலைவாசி உயர்வு, பணவீக்க விகித அதிகரிப்பு, நிதி நெருக்கடி விவகாரம், உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி-சோனியா இடையிலான அரசியல் போர், கேரளம் உள்ளிட்ட எதிர்க்கட்சி மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவது போன்ற பிரச்னைகள் விவாதிக்கப்படும் என்பதால் இந்தத் தொடர் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், டெல்லி, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப் பேரவை பொதுத் தேர்தல்களுக்கு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனாலும் நாடாளுமன்ற விவாதங்கள் முக்கியப் பிரச்சனைகளிலிருந்து திசை திருப்பப்படலாம் என்று தெரிகிறது.

தேர்தல் பிரசாரத்துக்காக மூத்த தலைவர்கள் 5 மாநிலங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளக்கூடும் என்பதால் நாடாளுமன்றத்திலும் இரண்டாம் நிலைத் தலைவர்களின் பங்கேற்பே அதிகம் இருக்கும்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை வெளியிலிருந்து ஆதரித்துவந்த இடதுசாரிகள் ஆதரவை விலக்கிக்கொண்டு தீவிரமாக எதிர்க்க ஆரம்பித்துள்ளதால், அணுசக்தி உடன்பாடு, வேலையில்லாத் திண்டாட்டம், விமான நிறுவனங்களின் ஆள்குறைப்பு நடவடிக்கை, கேரளம் உள்ளிட்ட எதிர்க்கட்சி மாநிலங்களின் புறக்கணிப்பு குறித்து மன்மோகன் சிங் அரசு கடும் கேள்விகளை சந்திக்க வேணிடி வரும்.

தொடர்ந்து மன்மோகன்சிங்கை குற்றம்சாட்டி வரும் பாரதியா ஜனதா கட்சி அவரை பதவி விலகுமாறு கூச்சல் இடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சங்பரிவார் உள்ளிட்ட மதவாதச் சக்திகளுக்கு தடை விதிக்கவேண்டும் என்ற கோஷங்களும் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படலாம்.

நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசை ஆதரித்து வாக்களிக்க எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்குப் பணம் கொடுத்த விவகாரம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட சிங் தேவ் கமிஷன் தனது பரிந்துரையை இந்தத் தொடரிலேயே அளிக்கவிருக்கிறது. எனவே மீண்டும் அந்த விவகாரம் குறித்துப்பேசப்படும்.

இதனிடையில் சிங்கூரில் டாடா ஆலையை நிறுவ முடியாமல் போனது, ராஜஸ்தானில் கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் ஏராளமானவர்கள் இறந்தது, விமான நிறுவனங்கள் மேற்கொண்ட ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் திடீரென்று வேலைகளை இழப்பது போன்ற பிரச்னைகள் கூட விவாதிக்கப்படலாம்.

இந்த விவாதங்கள் நாடாளுமன்றம் முறையாக நடந்தால் இடம் பெற வாய்ப்புள்ளது. அல்லது பாரதீய ஜனதா, இடதுசாரிகள் மற்றும் பிற காங்கிரஸ் எதிர்ப்பு கட்சிகள் அமளியில் ஈடுபட்டால் அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டே போக வேண்டிய நிர்பந்தமும் ஏற்படலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்