நானோ ஆலை: குஜராத் அரசுக்கு எதிராக வழக்கு!

புதன், 15 அக்டோபர் 2008 (17:13 IST)
டாடா நிறுவனத்தின் நானோ கார் தொழிற்சாலை அமைப்பதற்காக குஜராத்தின் சனந் தாலுக்காவில் உள்ள விவசாய நிலங்களை அம்மாநில அரசு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஷ்ட்ரிய கிஷான்-தல் என்ற அமைப்பு அகமதாபாத் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைப்பு தாக்கல் செய்துள்ள மனுவில், ஆனந்த் விவசாயப் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான நிலத்தை, விவசாயத்திற்குப் பயன்படுத்தாமல், ஆலை நிறுவுவதற்காக குஜராத் மாநில அரசு வழங்கியுள்ளது தவறு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சம்பந்தப்பட்ட நிலத்திற்கு உரிய விவசாயிகளுக்கு மாநில அரசு உரிய இழப்பீடு வழங்கவில்லை என்றும் அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

இந்த மனுவை விசாரித்த அகமதாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் மற்றும் அக்கில் குரேஷி தலைமையிலான டிவிஷன் பெஞ்ச், சம்பந்தப்பட்ட மனுவை குஜராத்தியில் மொழி பெயர்க்க உத்தரவிட்டதுடன், மனுதாரரை 3 நாள் கழித்து மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டனர்.

அம்மாநிலத்தின் சனந் தாலுக்காவில் உள்ள சரோடி கிராமப் பகுதியில் ஆனந்த் வேளாண் பல்கலை.க்கு சொந்தமான 1,100 ஏக்கர் நிலத்தை நானோ கார் தொழிற்சாலை அமைப்பதற்காக டாடா நிறுவனத்திற்கு அம்மாநில அரசு கடந்த வாரம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்