நாடகம் ஆடுகிறார் சோனியா: மாயாவதி தாக்கு!

புதன், 15 அக்டோபர் 2008 (16:15 IST)
எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்கு ஆதாயம் தேடவே, ரேபரேலி தொகுதியின் வளர்ச்சிக்காக சிறை செல்லவும் தயங்க மாட்டேன் என்று சோனியா கூறியதாக உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

webdunia photoFILE
இதுகுறித்து அவர் லக்னோவில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், காங்கிரஸ் கட்சி ரேபரேலி தொகுதியை பற்றி மட்டுமே கவலைப்படுகிறது. ஆனால், நான் ஒட்டுமொத்த உத்தரப்பிரதேசத்தின் நலனையும் பற்றி கவலைப்படுகிறேன்.

ரேபரேலியும், அமேதியும் தங்களின் தாய்வீடு போன்றவை என்று கூறும் சோனியா காந்தி, உத்தரபிரதேசத்தில் கடந்த 44 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியின் போதும், 48 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருந்த போதும் அப்பகுதி மக்களுக்கு எத்தனை வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறார்கள் என்று அவர்களால் கூற முடியுமா என மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார்.

ரயில் பெட்டி உற்பத்தித் தொழிற்சாலைக்கு சோனியா தலைமையில் பூமி பூஜை நடத்தப்படும் என்று சொல்வதெல்லாம் நாடகம்தான். இதனை வைத்து மக்களவைத் தேர்தலுக்கு ஆதாயம் தேடவே அவர்கள் திட்டமிட்டுள்ளதாக மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.

ரயில் பெட்டி உற்பத்தி தொழிற்சாலைக்கு நிலம் தர அப்பகுதி விவசாயிகள் யாருக்கும் சம்மதம் கிடையாது. முந்தைய அரசு ஆட்சியில் இருந்த காலத்தில் அதிகாரிகள் வலுக்கட்டாயமாக விவசாயிகளின் நிலங்களை தொழிற்சாலை அமைக்கும் பணிக்காக கையகப்படுத்தியுள்ளனர். எனவே, அப்பகுதி விவசாயிகளின் புகார்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.