தபால்துறையினருக்கு நிர்வாகவியல் பயிற்சி

இந்திய தபால் துறையில் பணியாற்றும், தபால்காரர் மற்றும் அதிகாரிகளுக்கு நவீன நிர்வாகவியல் பயிற்சியை அளிக்க தபால் துறை முடிவு செய்திருக்கிறது.

இதன்மூலம் தபால்காரர்கள் மற்றும் அதிகாரிகள் நாட்டின் கிராமப் பகுதிகளில் உள்ள மக்களிடம் தபால்துறையின் சேமிப்புக் கணக்கு, டெபாசிட்டுகள் உள்ளிட்ட சேவைகளை விரிவாக எடுத்துரைக்க ஏதுவாகும் என்று புதுடெல்லியில் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அவர்களுக்கு பிசினஸ் ஸ்கூல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தபால்துறை மூலமான சேமிப்பு, காப்பீடு உள்ளிட்டவற்றை கிராம மக்களிடம் கொண்டு செல்லவும், மக்களை எதிர்கொள்ளும் தபால்காரர்கள் உரிய முறையில் சேவையாற்றவும் இந்த நிர்வாகவியல் பயிற்சி உதவும்.

இந்தப் பயிற்சிக்காக புவனேஸ்வரைத்தைச் சேர்ந்த சேவியர் நிர்வாகவியல் கழகத்துடன் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

தபால் துறையினருக்கு அளிக்கப்படவிருக்கும் பயிற்சித் திட்டம் குறித்து கடந்த 3 மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

நவீன நிர்வாகவியல் தொழில்நுட்பங்களை தபால்துறை அதிகாரிகள் அறிந்து கொள்ளவும், கிராமப்புற மக்களுக்கு சேவையாற்றுவதில் கவனம் செலுத்தவும் பயிற்சி உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்