இந்திய கப்பல் கழகத்து‌க்கு 2 புதிய சரக்கு கப்பல்: டி.ஆர்.பாலு பெயர் சூட்டினார்!

செவ்வாய், 14 அக்டோபர் 2008 (17:40 IST)
தென் கொரியாவில் ஹ‌ூண்டாய் சம்ஹோ கனரக தொழில் நிறுவனம் கட்டமைத்த மிகப் பெரிய இரண்டு சரக்கு கப்பல்களுக்கு எஸ்.ி.ஐ. சென்னை, எஸ்.ி.ஐ. மும்பை என்று, தென் கொரியாவில் உள்ள மாக்போவில் நடைபெற்ற விழாவில் மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு இன்று பெயர் சூட்டினார்.

4,400 டி.இ.யு. கொள்ளளவு உள்ள இந்த கப்பல்கள் இந்தியாவிலேயே மிகப் பெரிய சரக்கு கப்பல்களாகும்.

பி‌ன்ன‌ர் இ‌வ்விழாவில் பேசிய அவ‌ர், ஹூண்டாய் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்ட, இந்திய கப்பல் கழகம் வாங்கியுள்ள இந்த கப்பல்கள், இந்தியாவின் சரக்கு கப்பல் போக்குவரத்தின் மிக முக்கிய பங்காற்றும் என்றார்.

இந்திய கப்பல் துறையில் தனது நிலையை தக்க வைத்துக் கொள்ள புதிதாக வாங்கப்பட்டுள்ள சரக்கு கப்பல்கள் இந்திய கப்பல் கழகத்திற்கு பெரிதும் உதவும் என்று தெரிவித்த அவ‌ர், நாட்டின் ஏற்றுமதி வர்த்தகத்திலும் இவை சிறந்த பங்காற்றும் என்று குறிப்பிட்டார்.

இந்தியாவின் மிகப் பெரிய சரக்கு கப்பல்களுக்கு முக்கிய துறைமுகங்களான மும்பை மற்றும் சென்னை ஆகியவற்றின் பெயரை வைத்திருப்பது மிக பொருத்தமாகும். நமது நாட்டு சரக்கு வர்த்தகத்தில் சரக்கு பெட்டகங்களை கையாள்வதில் இந்த துறைமுகங்கள் 80 ‌விழு‌க்காடு பங்கு வகிக்கின்றன என்று‌ம் அவ‌ர் தெரிவித்தார்.

சரக்கு கப்பல்களின் முக்கியத்துவத்தை குறிப்பிட்ட அமைச்சர், கடல் வழியாக சரக்குகளை ஏற்றிச் செல்வது உலக கப்பல் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியிருப்பதாக குறிப்பிட்டார். இந்திய சரக்கு வர்த்தகம் 2006-07இ‌ல் 17 விழுக்காடு வளர்ச்சி அடைந்திருப்பதாகவும், 2007-08இ‌ல் இது 21 விழுக்காட்டை எட்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்திய அரசு, சரக்கு போக்குவரத்து வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், வரும் காலத்தில் இந்திய கப்பல் கழகம் பல சரக்கு கப்பல்களை வாங்க திட்டமிட்டிருப்பதாகவும் அவ‌ர் கூறினார். ஹூண்டாய் நிறுவனம் இந்திய கப்பல் கழகத்தின் விரிவாக்கத் திட்டங்களில் தொடர்ந்து இணைந்து செயலாற்ற வேண்டும் என்றும், இந்திய கப்பல் துறைக்கு உலகத் தரம் வாய்ந்த கப்பல்களை சரியான விலையில் அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.

தென் கொரியாவில் உள்ள ஓக்போ கப்பல் தளத்தில் நே‌ற்று நடைபெற்ற விழாவில் இந்திய கப்பல் கழகம் வாங்கியுள்ள மிகப் பெரிய கச்சா எண்ணெய் கப்பலுக்கு எம்.டி. தேஷ் விராட் என்று டி.ஆர். பாலு பெயர் சூட்டினார். 3,19,000 டி.ட‌பி‌ள்யூ.டி. கொள்ளளவு உள்ள இந்த கப்பல் தேவூ கப்பல் கட்டுதல் மற்றும் கடல்சார் பொறியியல் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்