வரும் 11-ஆவது ஐந்தாண்டு திட்ட காலத்தில், கர்நாடக மாநிலத்தில் இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற மாநில அரசின் கோரிக்கையை உரிய முறையில் பரிசீலிக்க வேண்டும் என பிரதமரை அம்மாநில முதல்வர் பி.எஸ். எடியூரப்பா கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இதுதொடர்பாக பிரதமருக்கு எடியூரப்பா எழுதியிருக்கும் கடிதத்தில், கர்நாடகத்தில் ஏராளமான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகங்கள் சர்வதேச தரத்தில் உள்ளதாலும், 100-க்கும் மேற்பட்ட சர்வதேச நிறுவனங்கள் இருப்பதாலும், அவற்றுக்குத் தேவைப்படும் மனிதவளத்தை மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் இருந்தே பெற ஏதுவாக ஐஐடி அமைய வேண்டும் என்று கூறியுள்ளார்.
மத்திய அரசு புதிதாக சில ஐ.ஐ.டி-க்களை அமைப்பதற்கு அனுமதித்திருக்கும் நிலையில், கர்நாடக மாநிலத்தின் நேர்மையான தேவையை பூர்த்தி செய்யாமல் இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறியுள்ள எடியூரப்பா, அறிவுசார் சமுதாயத்தையும் மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளாக ஏற்படுத்தி வருகிறது என்றார்.
மத்திய அரசின் இந்த திட்டங்கள் திறம்பட நனவாவதற்கு கர்நாடக மாநிலத்தில் ஐ.ஐ.டி அமைய வேண்டியது அவசியம் என்றும் எடியூரப்பா அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.