ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த சிறுவன் சோனு பிணமாக மீட்பு!

திங்கள், 13 அக்டோபர் 2008 (15:15 IST)
உத்தரபிரதேசத்தின் சம்ஷாபாத் மாவட்டத்தில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சிறுவன் சோனு இன்று பிணமாக மீட்கப்பட்டான்.

அம்மாநிலத்தின் சம்ஷாபாத் மாவட்டத்தில் உள்ள லஹ்ரகபுரா (Lehrakapura) என்ற இடத்தில், கடந்த வியாழக்கிழமை சோனு என்ற 2 வயது சிறுவன், அம்மாவட்ட நிர்வாகத்தினரால் முறையாகப் பராமரிக்கப்படாமல் விடப்பட்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.

சுமார் 150 அடி ஆழமுடைய ஆழ்துளை கிணற்றில் சிறுவன் தவறி விழுந்த தகவலை அறிந்ததும், தீயணைப்புப் படையினரும், ராணுவ மீட்புக் குழுவினரும் நிகழ்விடத்திற்கு வந்து அவனை மீட்பதற்கான முயற்சியை உடனடியாகத் துவக்கினர்.

சோனு தவறி விழுந்த ஆழ்குழாய் கிணற்றிற்கு அருகேயே மற்றொரு பள்ளம் தோண்டி சிறுவனை வெளியே எடுக்க அவர் திட்டமிட்டு ராணுவத்தினர் பணியை துவக்கினாலும், போதிய வசதியின்மை காரணமாக பள்ளம் தோண்டும் பணி கணக்கிட்ட காலக்கெடுவை தாண்டியது.

அப்பகுதி மக்களின் உதவியுடன் கடந்த 4 நாட்களாக நடந்த இப்பணியின் முடிவில் இன்று சிறுவன் சோனு சிக்கிய பகுதியை ராணுவத்தினர் அடைந்தனர். உடனடியாக சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

ஆனால் சிறுவன் சோனு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்காக உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சிறுவன் சோனு ஆழ்துளை கிணற்றில் விழுந்த தகவலைத் தொடர்ந்து நீதி விசாரணை நடத்த உத்தரவிட்ட மாவட்ட நிர்வாகம், ஆழ்துளை கிணற்றை மூடத் தவறியதற்காக 2 அதிகாரிகளையும் பணி இடைநீக்கம் செய்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்