இந்திய தூதரகம் தாக்குதல் பற்றி என்.எஸ்.ஏ. கூட்டத்தில் விவாதிக்கப்படும்: மேனன்!
திங்கள், 13 அக்டோபர் 2008 (14:09 IST)
இந்தியா-பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கலந்து கொள்ளும் 2 நாள் கூட்டம் இன்று புதுடெல்லியில் துவங்கியது. இந்த கூட்டத்தில் காபூலில் இந்திய தூதரகம் தாக்கப்பட்டது மற்றும் பாகிஸ்தானின் போர்நிறுத்தம் ஒப்பந்த மீறல் குறித்துவி வாதிக்கப்படும் என அயலுறவுத்துறை செயலர் சிவ் சங்கர் மேனன் கூறியுள்ளார்.
புதுடெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், காபூலில் இந்திய தூதரகத்தில் குண்டுவெடிப்பு, போர்நிறுத்தம் மீறல், எல்லையில் உள்ள நிலை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மகமூத் அலி துரானி உடன் ஆலோசிக்கப்படும் என்றார்.
இந்த பேச்சுவார்த்தையின் போது காபூலில் இந்திய தூதரகம் மீது நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு பற்றி பிரச்சினை எழுப்பப்படுமா, பாகிஸ்தான் உளவுத்துறைக்கு இதில் தொடர்பு உள்ளது குறித்து ஆதாரங்கள் எதுவும் காட்டப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த அவர்,பேச்சுவார்த்தை இப்போதுதான் துவங்கியுள்ளது, நாங்கள் அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் ஆலோசிப்போம், துரானி பழைய நண்பர், அவர் இந்தியா- பாகிஸ்தான் உறவில் ஆர்வமாக உள்ளார் என்றும் கூறினார்.
இருநாடுகளின் பாதுகாப்பு நிலை, பயங்கரவாதத்தைஎதிர்ப்பது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனுடன் விவாதிப்பதற்காக 5 நாள் பயணமாக கடந்த சனிக்கிழமை துரானி, இந்தியா வந்தார்.
பிரதமர் மன்மோகன் சிங், அயலுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங் ஆகியோரையும் நாளை சந்திக்கும் துரானி புதன்கிழமை நாடு திரும்புகிறார் என்று அயலுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.