மதக் கலவரத்தை அடக்குவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி முடிவு செய்ய, டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மாநில முதல்வர்கள் மாநாடு இன்று நடக்கிறது.
ஒரிசா, கர்நாடகா உட்பட சில மாநிலங்களில் சமீபத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள், வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடந்தது. குறிப்பாக, ஒரிசாவில், கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல் தொடர்ந்து நடக்கிறது.
மதக் கலவரத்தை தடுக்க நடவடிக்கை எடுப்பது பற்றி ஒருமித்த கருத்து ஏற்படுத்த, மாநில முதல்வர்கள் மாநாட்டை கூட்ட மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக டெல்லியில் தேசிய ஒருமைப்பாடு கவுன்சில் கூட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் இன்று கூட்டியுள்ளார்.
இதில், ஒரிசா, கர்நாடகாவில் சிறுபான்மையினருக்கு எதிராக நடந்த தாக்குதல் பற்றியும், மதக் கலவரத்தை தடுக்க எடுக்க வேண்டிய உறுதியான நடவடிக்கை பற்றியும் தீவிரவாதம் பற்றியும் விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில், மத்திய கேபினட் அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். தமிழகத்தின் சார்பில் அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலர் ஸ்ரீபதி உள்ளிட்ட முக்கிய உயரதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.