காஷ்மீரில் 50 மணி நேர ஊடரங்கு ‌வில‌க்க‌‌ல்!

செவ்வாய், 7 அக்டோபர் 2008 (11:36 IST)
காஷ்மீர் பிரிவினைவாத அமைப்புகள் தாங்கள் நடத்த இருந்த போராட்டத்தை கைவிடுவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை அம்மாநில அரசு இன்று அதிகாலை திரும்பப் பெற்றது.

லால்-சௌக் பகுதியில் போராட்டம் நடத்தப் போவதாக பிரிவினைவாத அமைப்புகள் அறிவித்ததைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை நள்ளிரவு முதல் அம்மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, பதட்டமான பகுதிகளில் காவல்துறையினரும், துணை இராணுவப் படையினரும் குவிக்கப்பட்டனர். லால்-சௌக் பகுதிக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கும் “பாஸ”களை போதிய அளவு அரசு வழங்காததால் அம்மாநிலத்தின் முக்கிய பத்திரிகைகள் நேற்று பிரசுரமாகவில்லை.

இந்நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதாலும், போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்த பிரிவினைவாத அமைப்புகள் தங்கள் முடிவை கைவிடுவதாக அறிவித்ததாலும் ஊரடங்கு உத்தரவை அரசு திரும்பப் பெற்றுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பிரிவினைவாத அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நாளை கூட்டம் நடத்தப்பட உள்ளது.

3 இடங்களில் நேற்று ஊரடங்கு தளர்வு: அம்மாநிலத்தின் பஹல்காம், ஸ்ரீ காஃப்வாரா, கோகெர்நாகஆகிய 3 பகுதிகளில் உள்ள குடியிருப்புவாசிகள், ஊரடங்கு தளர்த்தப்பட்டால் தாங்கள் போராட்டத்தில் ஈடுபட மாட்டோம் என்று உள்ளூர் நிர்வாகத்திடம் உறுதியளித்ததைத் தொடர்ந்து அப்பகுதிகளில் நேற்று மாலையே ஊரடங்கு தளர்த்தப்பட்டது.

ஊரடங்கு தளர்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் அப்பகுதி கடைகள் திறக்கப்பட்டன. வர்த்தம் வழக்கம் போல் நடந்ததாகவும், மக்கள் சகஜ நிலைக்கு திரும்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்