இந்தியா- பாகிஸ்தான் நீர்ப் பங்கீடு: இம்மாத இறுதியில் பேச்சு!
திங்கள், 6 அக்டோபர் 2008 (20:57 IST)
சேனாப் ஆற்றில் திறந்துவிடப்படும் நீரின் அளவை இந்தியா குறைத்து விட்டதென்று பாகிஸ்தான் குற்றம்சாற்றி உள்ள நிலையில், அந்தச் சிக்கல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான மற்ற நீர்ப் பங்கீட்டு விவகாரங்கள் தொடர்பாக இந்த மாத இறுதியில் பேச்சு நடத்தப்பட உள்ளது.
இந்தப் பேச்சின்போது, சிந்து நதி நீர் ஆணையத்தில் உள்ள இரண்டு நாட்டின் ஆணையர்களும் கூடி விவாதித்து, நீர்ப் பங்கீட்டு பிரச்சனைகளில் இரண்டு தரப்பும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தீர்வு காண்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பாகிஸ்தானைச் சேர்ந்த சிந்து நதி நீர் ஆணையர் சையத் ஜமாத் அலி ஷாவும் அவரது குழுவினரும் ஜம்மு- காஷ்மீரிலுள்ள பக்லிஹார் அணைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்துவார்கள் என்று கருதப்படுகிறது. இந்த நீர்த் தேக்கத்தை நிறைப்பதற்காகவே சேனாப் ஆற்றில் திறந்துவிடப்படும் நீரின் அளவை இந்தியா குறைத்து விட்டதென்று பாகிஸ்தான் குற்றம்சாற்றியுள்ளது.
450 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட பக்லிஹார் நீர்மின் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு உலக வங்கி ஒரு ஆண்டிற்கு முன்பே அனுமதி தந்துவிட்டபோதிலும், இந்தியா- பாகிஸ்தான் இடையில் நிலவும் கருத்து வேறுபாட்டின் காரணமாக அந்தத் திட்டம் செயல்படுத்தப்படாமலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.
சேனாப் ஆற்றில் திறந்துவிடப்படும் நீரின் அளவை இந்தியா குறைத்துவிட்டதால் தங்கள் நாட்டில் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் குற்றம்சாற்றியுள்ளது.
இதுகுறித்து இந்தியா தரப்பில் கேட்டதற்கு, கடந்த சில நாட்களாக நீர்த் தட்டுப்பாட்டின் காரணமாக திறந்துவிடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், "இந்தியாவில் இருந்து திறந்துவிடப்படும் நீரை நேரடியாக பாசனத்திற்குத் தராமல் மராலா அணைக்கட்டில் பாகிஸ்தான் சேமித்து வைக்கிறது. தற்போது அப்பகுதியில் பலத்த மழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்துள்ள நிலையில் மராலா அணை எப்படி வறண்டுபோகும்" என்று இந்திய அதிகாரி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.