ஒரிசா, கர்நாடகா கலவரம்: சிவராஜ் பாட்டீலிற்கு அரசு உத்தரவு!
வெள்ளி, 3 அக்டோபர் 2008 (15:56 IST)
ஒரிசா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக நடந்துள்ள கலவரங்கள் குறித்து மிகுந்த கவலை தெரிவித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், அந்த மாநிலங்களின் தற்போதைய நிலை பற்றி ஆய்வு செய்து உடனடியாக மதிப்பீட்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலிற்கு உத்தரவிட்டுள்ளார்.
தலைநகர் டெல்லியில் இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒரிசா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கிறித்தவர்களுக்கு எதிராக நடந்துள்ள கலவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இத்குறித்து அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தகவல், ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி, "ஒரிசா, கர்நாடகா மாநிலங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக நடந்துள்ள கலவரங்களுக்கு பிந்தைய நிலை குறித்து ஆய்வு செய்து அடுத்த அமைச்சரவைக் கூட்டத்திற்குள் மதிப்பீட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.
ஒரிசாவில் குறிப்பாக கந்தாமல் மாவட்டம், கர்நாடகா ஆகிய இடங்களில் கிறித்தவர்களுக்கு எதிராக நடந்துள்ள கலவரங்கள் குறித்து அரசு மிகுந்த கவலை தெரிவித்துள்ளது என்றார் அவர்.
ஒரிசாவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதா என்று கேட்டதற்கு, பிரச்சனையின் எல்லா அம்சங்களையும் கவனத்தில் கொள்ளாமல் அரசியல் சட்டத்தின் பேரைச் சொல்லி எதை வேண்டுமானாலும் மத்திய அரசால் செய்துவிட முடியாது என்றார் தாஸ் முன்ஷி.
அதே நேரத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு எந்த நடவடிக்கையை வேண்டுமானாலும் எடுக்கும் என்றார் அவர்.