எரிபொருள் வழங்கல் உறுதிக்கு பின்னரே அணு உலை ஆய்வு: கபில்சிபல்!
வெள்ளி, 3 அக்டோபர் 2008 (12:47 IST)
அணு எரிபொருள் தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்படும் வரை இந்திய அணு உலைகளை சர்வதேச அமைப்புகள் பார்வையிட அனுமதிக்கமாட்டோம் என மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை அமைச்சர் கபில்சிபல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக எதிர்க் கட்சியினருக்கு ஒரு விடயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அணு எரிபொருள் தடையின்றி இந்தியாவுக்கு வழங்கப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்ட பின்னரே அணு உலைகளை ஆய்வு செய்ய இந்தியா அனுமதி வழங்கும் எனத் தெரிவித்தார்.
அணு சக்தி ஒப்பந்தம் அமெரிக்க செனட் சபையில் நிறைவேறியுள்ளது. இதற்கு அமெரிக்க அதிபர் விரைவில் ஒப்புதல் அளித்துவிடுவார். அதன் பின்னர் நமது அணு சக்தி தேவைகளுக்காக பிரான்ஸ் மற்றும் ரஷியாவை நாடுவோம் என அவர் மேலும் கூறினார்.
அமெரிக்காவுடன் மேற்கொள்ளும் அணு சக்தி ஒப்பந்தத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மத்திய அரசு இதனை நிறைவேற்றுவது குறித்து கேட்டதற்கு, நாட்டின் எதிர்கால மின் தேவையை அறியாமல் இந்த ஒப்பந்தத்தை சிலர் எதிர்க்கிறார்கள். எதிர்காலத்தில் தொழிற்சாலைகள் இயங்கவும், அலுவலகங்கள் செயல்படவும் தேவைப்படும் மின்சாரத்தை இந்த ஒப்பந்தம் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்புமின்றி வழங்கும் என்றார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் எதிர்காலத்தில் முதன்மையான 3 வல்லரசு நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும். இந்தியாவின் தலைமைப் பண்பை உலகம் எதிர்பார்க்கும். அதற்கு நமது திறமை, சக்தியின் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். ஆனால் துரதிருஷ்டவசமாக எதிர்க்கட்சிகள் சிலர் அவநம்பிக்கையுடன் செயல்படுகின்றனர் என அமைச்சர் கபில்சிபல் வருத்தம் தெரிவித்தார்.