மகாத்மா காந்தியின் 139 ஆவது பிறந்த நாள்!
வியாழன், 2 அக்டோபர் 2008 (14:00 IST)
மகாத்மா காந்தியின் 139 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தலைநகர் டெல்லி, ராஜ் காட்டில் உள்ள அவரது சமாதிக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், துணைக் குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி, பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் மணிசங்கர் அய்யர், டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித் உள்ளிட்ட தலைவர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அகிம்சையை போதித்த தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாளை குறிக்கும் வகையில் குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் பங்கேற்று மலர் தூவ மத நல்லிணக்க வழிபாடும் நடந்தது.
ராஜ் காட்டிற்குச் செல்லும் வழி நெடுக மலர்கள் தூவப்பட்டு இருந்தன. தலைவர்கள் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
காந்தியவாதிகளும், காங்கிரஸ் தொண்டர்களும் பெருமளவில் வெள்ளை உடையணிந்து திரண்டிருந்தனர். பலர் 24 மணி நேர ராட்டை நூற்கும் நிகழ்ச்சியையும் நடத்தினர்.