திரிபுராவில் தொடர் குண்டுவெடிப்பு: 4 பேர் பலி; 100 பேர் படுகாயம்!
வியாழன், 2 அக்டோபர் 2008 (11:17 IST)
திரிபுரா தலைநகர் அகர்தலாவில் நேற்றிரவு 7 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 4 பேர் பலியாயினர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுரா தலைநகர் அகர்தலாவில் நேற்றிரவு 7.30 மணி அளவில் அடுத்தடுத்து 7 இடங்களில் குண்டுகள் வெடித்தன.
மகாராஜாகஞ்ச் பகுதியில் உள்ள முக்கிய மார்க்கெட், ராதாநகர் பேருந்து நிலையம், ஜி.பி.பஜார், கிரிஷ்நகர், மற்றும் பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் புறநகர் பகுதியான அபயநகர் ஆகிய இடங்களில் குண்டுகள் வெடித்தன.
இரவு 10 மணிக்கு மேலும் இரண்டு இடங்களில் குண்டுகள் வெடித்தன. அதில் ஒரு இடத்தில் வெடிக்காத குண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டது.
முதல் குண்டு ராதாநகர் பேருந்து நிலையத்தில் வெடித்தது. இதில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உடல் சிதறி பலியானார். 3 பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்தனர். 7 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 100க்கு மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் அந்தப் பகுதிகளில் சந்தேகத்துக்கு இடம்தரும் வகையில் சுற்றிக்கொண்டிருந்ததாகவும், அவர்கள் அங்கிருந்து சென்ற 3 நிமிடங்களுக்குள் குண்டுகள் வெடித்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
வங்கதேசத்திலிருந்து செயல்படும் ""ஹிஸ்புல் முஜாஹிதீன் இஸ்லாமியா'' (ஹூஜி) என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களின் வேலைதான் இது என்று திரிபுரா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.