ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடத்துவதற்கேற்ற சூழல் இல்லை: உமர் அப்துல்லா!
புதன், 1 அக்டோபர் 2008 (12:52 IST)
ஜம்மு-காஷ்மீரின் தற்போதைய சூழல் சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்கு ஏற்றதாக இல்லை என தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ஜம்முவில் உள்ள மக்கள் தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக உணர்கிறார்கள். அதிலும் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்த உணர்வின் தாக்கம் அதிகமாக உள்ளது.
எனவே தற்போதைய காலகட்டத்தில் தேர்தல் நடத்தினால் வாக்குப்பதிவு விழுக்காடு சரியும் என்றும், இதனால் தேர்தல் நடத்துவதன் நோக்கம் ஈடேறாது என்றும் உமர் அப்துல்லா குறிப்பிட்டார்.
எனினும், தேர்தல் தேதியை அறிவிக்கும் உரிமை தேர்தல் ஆணையத்திற்கே உள்ளது என்றும், இந்த விடயத்தில் தேசிய மாநாட்டுக் கட்சி தலையிடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்டால், தேசிய மாநாட்டுக் கட்சி அதனைப் புறக்கணிக்குமா என்ற கேள்விக்கு, சவால்களை எதிர்கொள்வதில் இருந்து தமது கட்சி ஒருபோதும் பின்வாங்கியதில்லை என்று குறிப்பிட்ட அவர், இதுகுறித்து தேசிய மாநாட்டுக் கட்சியின் செயற்குழு தக்க தருணத்தில் முடிவு செய்யும் என உமர் அப்துல்லா பதிலளித்தார்.