ஜம்மு: தீவிரவாதிகளுக்கு 'சிம்' கார்டு விநியோகித்த 4 பேர் கைது!
திங்கள், 29 செப்டம்பர் 2008 (15:15 IST)
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் ரஜோரி, பூஞ்ச் மாவட்டத்தில் தங்கள் பெயர்களில் செல்பேசிக்கான 'சிம்' கார்டுகளை வாங்கி தீவிரவாதிகளுக்கு விநியோகித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரஜோரி, பூஞ்ச் மாவட்டத்தில் சிலர் சிம் கார்டுகளை தங்கள் பெயரில் வாங்கி தீவிரவாதிகளுக்கு விநியோகம் செய்வதாக கிடைத்த தகவலையடுத்து காவல் துறை, பாதுகாப்பு படையினர் அப்பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர்.
இந்த தேடுதல் வேட்டையில், செல்பேசி 'சிம்' கார்டுகளை தங்கள் பெயரில் வாங்கி தீவிரவாதிகளுக்கு விநியோகம் செய்த நசீர், அம்ஜத் கான், மஜீத் கான், குயும் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 60 'சிம்' கார்டுகளும் கைப்பற்றப்பட்டன.
இதைத் தொடர்ந்து, தீவிரவாதிகளுக்கு செல்பேசி, 'சிம்' கார்டு வசதிகளை செய்து தரும் தீவிரவாதிகளின் ஆதரவாளர்களுக்கு எதிராக காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த நடவடிக்கை அப்பகுதியில் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.