நானாவதி ஆணையத்தின் அறிக்கைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வெள்ளி, 26 செப்டம்பர் 2008 (15:49 IST)
கோத்ரா கலவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நானாவதி ஆணையம் தாக்கல் செய்துள்ள முதல்கட்ட அறிக்கைக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
கடந்த 2002 இல் குஜராத் மாநிலம் கோத்ராவில் சபர்மதி விரைவு ரயில் எரிக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து நடந்த கலவரங்கள் ஆகியவை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நானாவதி ஆணையம் தனது அறிக்கையின் முதல் பகுதியை குஜராத் அரசிடம் சமர்ப்பித்துள்ளது. பின்னர் அது சட்டப் பேரவையிலும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த அறிக்கைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி அமைதி, சமூக நீதிக்கான குடிமக்கள் இயக்கம் என்ற தன்னார்வத் தொணடு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
இந்நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், "கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ரயில்வே அமைச்சகம் நியமித்த நீதிபதி யு.சி.பானர்ஜி தலைமையிலான குழு, சபர்மதி ரயிலில் தீ பிடிக்கக் காரணம் விபத்துதான் என்று கூறி தாக்கல் செய்த அறிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
அதைப் போலவே உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி நானாவதி தலைமையிலான குழு, கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவமானது திட்டமிடப்பட்ட சதி என்று கூறி தாக்கல் செய்துள்ள முதல்கட்ட அறிக்கைக்கும் தடை விதிக்க வேண்டும்."என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான முதன்மை அமர்வு, நானாவதி அறிக்கைக்குத் தடை விதிக்க மறுப்புத் தெரிவித்ததுடன், வழக்கின் அடுத்த விசாரணையை அக்டோபர் 13 ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தது.
முன்னதாக, "கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, அவரது அமைச்சரவை உறுப்பினர்கள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு தொடர்புள்ளது என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை" என்றும் நானாவதி அறிக்கை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.