கர்நாடக கலவரங்களில் பஜ்ரங் தளத்திற்குத் தொடர்பு: உள்துறை!
வியாழன், 25 செப்டம்பர் 2008 (20:58 IST)
கர்நாடகாவில் நடந்த மதக் கலவரங்களில் பஜ்ரங் தளம் அமைப்பிற்குத் தொடர்புள்ளதாகவும், குற்றவாளிகளுக்கு எதிராக மாநில அரசு உறுதியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
கர்நாடகத்தில் கிறித்தவ தேவாலயங்களும், வழிபாட்டுக் கூடங்களும் தாக்கப்பட்டதையடுத்து அந்த மாநிலத்தில் 2 நாட்கள் தங்கியிருந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த உள்துறை சிறப்புச் செயலர் (உள்நாட்டுப் பாதுகாப்பு) எம்.எல்.குமாவத், "கிறித்தவ தேவாலயங்கள், வழிபாட்டுக் கூடங்கள், பள்ளிகள் ஆகியவற்றின் மீது நடந்துள்ள தாக்குதல்களில் பஜ்ரங் தளம் அமைப்பிற்குத் தொடர்புள்ளது" என்றார்.
மங்களூரில் தேவாலயங்கள் தாக்கப்பட்டதையடுத்து செப்டம்பர் 15 ஆம் தேதி நடந்த கலவரங்களின் போது, முற்றிலும் புதிதாக பணியமர்த்தப்பட்டு இருந்த காவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாற்றினார்.
தேவாலயங்களையும், வழிபாட்டுக் கூடங்களையும் மர்மக் கும்பல் தாக்கிக்கொண்டு இருந்தபோது, உள்ளே நுழைந்த காவலர்கள் அங்கிருந்த பெண்களையும் குழந்தைகளையும் தாக்கியுள்ளனர் என்ற குமாவத், மங்களூர் காவல்துறைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் பலர் சமூகவிரோதிகளுக்கு துணையாகச் செயல்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
கிறித்தவர்களின் மீதான தாக்குதல்களில் தொடர்புடைய குற்றவாளிகளின் மீது கர்நாடக மாநில அரசு உறுதியாகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய குமாவத், தனது விசாரணை அறிக்கையை மத்திய அரசிடம் இன்னும் ஓரிரு நாட்களில் சமர்ப்பிக்கப்போவதாகத் தெரிவித்தார்.
கர்நாடகத்தில் கிறித்தவர்களுக்கு எதிரான கலவரங்கள் குறித்து விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ள இரு நபர் குழுவில் குமாவத் தவிர, இணைச் செயலர் (மனித உரிமைகள்) ஏ.கே.யாதவ் இடம்பெற்றுள்ளார்.