ஒரிசாவில் மழை, வெள்ளத்திற்கு 50 பேர் பலி!
வியாழன், 25 செப்டம்பர் 2008 (19:12 IST)
ஒரிசாவில் மழை, வெள்ளத்திற்கு 50 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். முக்கிய நதியான மகாநதியில் புதிதாக 43 இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் மேலும் 61 கிராமங்களுக்கு வெள்ளம் பரவியுள்ளது. 8 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் 5 நாட்களுக்கும் மேலாக வெள்ளத்தின் நடுவில் தத்தளிக்கின்றனர்.
ஒரிசாவில் கடந்த சில நாட்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது. ஹிராகுட் அணை நிரம்பி வழிவதால் அணைக்கு வரும் லட்சக்கணக்கான கன அடி நீர் முழுவதும் மகாநதியிலும் அதன் கிளைகளிலும் திறந்து விடப்படுகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளம் அபாய கட்டத்தைக் கடந்து கரை புரண்டு ஓடுகிறது.
மகாநதியிலும் அதன் கிளைகளிலும் 100 இடங்களில் ஏற்பட்டுள்ள உடைப்பு 143 ஆக உயர்ந்துள்ளது என்றும், மழை, வெள்ளத்திற்குப் பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது என்றும் மாநிலப் பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது. இதனால் புதிதாக 61 கிராமங்களுக்கு வெள்ளம் பரவியுள்ளது. 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றனர்.
வெள்ளம் பாதித்துள்ள பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்காக 90 டன் எடையுள்ள தயார் உணவுகளை அனுப்பியுள்ளதாகவும், இதனால் 25,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயன்பெறுவர் என்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் மன்மோகன் சமால் தெரிவித்தார்.
கனாஸ், டெலாங், ஜகத்சிங்பூர், குஜாங் உள்ளிட்ட பகுதிகளில் 61க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 41,000 குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்த சமால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை உடனடியாகச் சென்று சேரும் வகையில் ஜீரோ பேலன்ஸ் கணக்குகளை துவக்குவது தொடர்பாக வங்கிகளுடன் பேச்சு நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.