பாக்.கிற்கு அமெரிக்காவின் எஃப்-16 விமானம்: இந்தியாவுக்கு பாதிப்பில்லை!

புதன், 24 செப்டம்பர் 2008 (18:49 IST)
பாகிஸ்தான் விமானப்படைக்கு நவீன ரக எஃப்-16 (F-16) போர் விமானங்களை அமெரிக்கா வழங்கினாலும் அதனால் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதால் இதுகுறித்து கவலை கொள்ளத் தேவையில்லை என இந்திய விமானப்படைத் தளபதி ஃபலி மேஜர் (Fali H Major) தெரிவித்துள்ளார்.

இந்திய வான்வெளித் துறையில் புதிய வாய்ப்புகளும், கூட்டணியும் என்ற தலைப்பிலான புத்தகத்தை டெல்லியில் இன்று நடந்த 3வது சர்வதேச மாநாட்டில் வெளியிட்ட பின்னர் செயதியாளர்களிடம் பேசிய போது இதனை அவர் தெரிவித்தார்.

சீன விமானப்படை இந்தியாவை விட பலம் வாய்ந்ததா என்ற கேள்விக்கு, சீன விமானப் படையுடன், இந்திய விமானப்படையை ஒப்பிடுவது சரியாக இருக்காது. ஏனெனில் அவர்களுடைய விமானப்படை அளவிலும், திறமையிலும் சிறப்பாக உள்ளது. மேலும் சீனாவில் உள்ள அரசு, நீதி மற்றும் அதிகார வர்க்கம் இந்தியாவை விட வித்தியாசமானது.

எனவே, இந்தியாவைப் போன்ற துடிப்புள்ள ஜனநாயக நாட்டின் விமானப்படையை, சீனாவுடன் ஒப்பிட முடியாது என்றார்.

எஃப்-16 ரக அதிநவீன போர் விமானங்களை வழங்குவதன் மூலம் பாகிஸ்தான் விமானப்படையை மேம்படுத்த அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ள நிலையில் இந்திய விமானப்படைத் தளபதி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்