பயங்கரவாதத்தை ஒடுக்க இப்போதுள்ள சட்டங்களே போதுமானது: சிவராஜ் பாட்டீல்!

செவ்வாய், 23 செப்டம்பர் 2008 (20:00 IST)
நமது நாட்டில் தற்போதுள்ள சட்டங்களைக் கொண்டே பயங்கரவாதத்திற்கு எதிராக ஸ்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், இந்த சட்டங்களே போதுமானது என்றார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்ப‌ப்பட்ட பேட்டியில், இதனைத் தெரிவித்துள்ள சிவராஜ் பாட்டீல், தீவிரவாதத்தை ஒடுக்க தற்போதுள்ள சட்டங்களே போதுமானது, அவற்றை சிறப்பாக, முழுமையாக அமல்படுத்தினாலே தீவிரவாதத்தை ஒடுக்க முடியும் எனக் கூறினார்.

மகரா‌ஷ்டிராவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த போது அமைப்பு ரீதியான தீவிரவாத தடுப்பு சட்டங்கள் அமலில் இருந்தன எனக் குறிப்பிட்டுள்ள பாட்டீல், இதேபோல் டெல்லியிலும் சட்டங்கள் இருந்த கால கட்டத்தில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது.

எனவே, தீவிரவாதத்திற்கு எதிராக சட்டம் இயற்றுவதற்கு பதிலாக, தற்போதுள்ள சட்டங்களை முழுமையாக அமல்படுத்தினாலே தீவிரவாதத்தை ஒடுக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

டெல்லி தொடர் குண்டு வெடிப்புக்கு பின்னர் நடந்த மாநில ஆளுநர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர், தீவிரவாதத்திற்கு எதிராக வலுவான சட்டங்கள் இயற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்