பயங்கரவாதிகள் இலக்கு? கோவாவில் பாதுகாப்பு அதிகரிப்பு!

திங்கள், 22 செப்டம்பர் 2008 (18:44 IST)
சுற்றுலா நகரான கோவாவை பயங்கரவாதிகள் தாக்கக்கூடும் என்ற தகவலை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவா காவல்துறை தலைமையகம், அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பியுள்ள தகவலில், தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பையும், கண்காணிப்பையும் தீவிரப்படுத்தும்படி கேட்டுக் கொண்டுள்ளது.

எந்த அசம்பாவிதத்திற்கும் வாய்ப்பு அளித்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பதாகவும், அனைத்து வாகனங்களும் சோதனையிடப்படுவதாகவும், காவல்துறை உயரதிகாரி ஒருவர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

கேரளாவில் இருந்து வட இந்தியாவிற்கு செல்லும் ரயிலில், கோவாவில் நாச வேலைகளை நடத்துவதற்காக வெடிபொருள் கொண்டு செல்லப்பட்டதாக, கேரள காவல்துறை எச்சரித்திருந்தது.

இதையடுத்து, மர்ம கோவாவிற்கு இன்று காலை வந்த அந்த ரயிலை காவல்துறையினர் சோதனையிட்டனர். இதில் எந்த வெடிபொருட்களும் கிடைத்ததாக தகவல் இல்லை.

எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடற்கரை பகுதிகள், மக்கள் கூடுமிடங்கள் உள்ளிட்ட பல இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவா அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்