கர்நாடக வன்முறை: மத்திய அரசு மீது எடியூராப்பா குற்றச்சாட்டு!

திங்கள், 22 செப்டம்பர் 2008 (16:32 IST)
கர்நாடகாவில் தேவாலயங்கள் மீது நடந்த தாக்குதல் சம்பவத்தை அரசியலாக்க முயல்வதாக, மத்திய அரசு மீது முதலமைச்சர் எடியூரப்பா குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடகாவில் கிறித்தவ தேவாலயங்கள் மீது பஜ்ரங்தள் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. சில இடங்களில் மத ரீதியான மோதல்கள் தொடரும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கர்நாடக வன்முறைச் சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்காக முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் மாநில அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் இன்று பெங்களூருவில் நடந்தது.

இக்கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் எடியூரப்பா பேசியதாவது:

கர்நாடகாவில் தேவாலயங்கள் மீது நடந்த தாக்குதல் கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தாக்குதலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் அவர்கள் மீது குண்டர் சட்டத்தைப் பயன்படுத்தவும் அரசு தயங்காது.

கர்நாடக மோதல்களை அரசியலாக்கி மத்திய அரசு ஆதாயம் தேடப்பார்க்கிறது. அரசியல் அமைப்பின் 355 பிரிவைப் பயன்படுத்தி மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் மத்திய அரசு, இதே பிரிவை அமர்நாத், சிங்கூர் நில விவகாரங்களில் பயன்படுத்தாதது ஏன்?

மாநிலத்தில் உள்ள கிறித்தவ தேவாலயங்களுக்கு 24 மணி நேரப் பாதுகாப்பு அளிக்கப்படும். இதுதொடர்பாக கிறித்தவ சமூகத்தினரை இன்று மாலை சந்தித்துப் பேசுவேன்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்