தேவாலயம் மீது தாக்குதல்: எடியூரப்பா ஆலோசனை!

திங்கள், 22 செப்டம்பர் 2008 (12:58 IST)
கிறித்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக விவாதிப்பதற்காக, முதலமைச்சர் எடியூராப்பா தலைமையில் கர்நாடகா அமைச்சரவைக் கூட்டம் இன்று பெங்களூருவில் கூடி ஆலோசனை நடத்துகிறது.

கர்நாடக மாநிலத்தில் கிறித்தவ தேவாலயங்கள் மீது கடந்த சில நாட்களாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கட்டாய மதமாற்றம் நடப்பதாகக் கூறி உடுப்பி, மங்களூரு ஆகிய இடங்களில் பஜ்ரங்தள் அமைப்பினர் தேவாலயங்கம் மீது தாக்குதல் நடத்தினர்.

இத்தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள தேவாலயம், மரியண்ணபாளையாவில் உள்ள தேவாலயம் ஆகியவற்றை விஷமிகள் நேற்று காலை தாக்கி சேதப்படுத்தினர்.

கர்நாடகாவில் கிறித்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், இதுதொடர்பாக மாநில அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை கூடி அவசர ஆலோசனை நடத்துகிறது.

முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், மத வன்முறைகள் ஏற்படாமல் தடுப்பது, தேவாலயங்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, தாக்குதலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்