எல்லை தாண்டிய வர்த்தகம்: நாளை பேச்சு!
ஞாயிறு, 21 செப்டம்பர் 2008 (18:32 IST)
அக்டோபர் முதல் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வர்த்தகத்தை துவங்குவதற்குத் தயாராகும் வகையில், இந்தியா- பாகிஸ்தான் இடையிலான கூட்டு நடவடிக்கைக் குழு புது டெல்லியில் நாளை கூடுகிறது.
ஸ்ரீநகர்- முசாபராபாத், பூஞ்ச்- ராவல்கோட் வழித்தடங்களில் பேருந்துப் போக்குவரத்து எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாக கூட்டு நடவடிக்கைக் குழு விவாதிக்கும் என்று இஸ்லாமாபாத்தில் இருந்து வெளியாகும் டான் நாளிதழ் தெரிவிக்கிறது.
மேலும், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டுவதற்காக மூன்று புதிய நுழைவாயில்களை அடுத்த மாதம் அறிமுகம் செய்வது தொடர்பாகவும அதிகாரிகள் விவாதிக்கவுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் நடந்த இந்தியா- பாகிஸ்தான் அயலுறவு செயலர்கள் கூட்டத்தில், வர்த்தகத்தில் இடம்பெறும் பொருட்களின் பட்டியலும், இரண்டு நாடுகளும் பெற்றுக்கொள்ள விரும்பும் பொருட்களின் பட்டியலும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
இந்திய அயலுறவுச் செயலர் சிவசங்கர் மேனன், பாகிஸ்தான் அயலுறவுச் செயலர் சல்மான் பஷீர் ஆகியோர் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் எல்லை தாண்டிய வர்த்தகம் தொடர்பாக மேலும் சில முடிவுகளும் மேற்கொள்ளப்பட்டன.