பாகிஸ்தான் குண்டு வெடிப்பு : மன்மோகன் சிங் கண்டனம்!
ஞாயிறு, 21 செப்டம்பர் 2008 (16:47 IST)
பாகிஸ்தானில் நடந்த தற்கொலைத் தாக்குதலுக்கு பிரதமர் மன்மோகன் சிங் அதிர்ச்சியும், கடும் கண்டனமும் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானிக்கு எழுதியுள்ள கடிதத்தில், "நமது இரண்டு நாடுகளின் வளர்ச்சி, ஸ்திரத்தன்மை, அமைதி ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலைத் தரும் இதுபோன்ற தாக்குதல்களுக்குப் பொறுப்பான பயங்கரவாத சக்திகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.
"நம்முடைய அமைதி, ஸ்திரத் தன்மை, முன்னேற்றம் ஆகியவற்றை தனித்தனியாகவும், மொத்தமாகவும் சீர்குலைக்க பயங்கரவாத சக்திகள் முயற்சித்து வருகிறார்கள்.
இந்த முயற்சிகளில் அவர்கள் வெற்றிபெற நாம் அனுமதிக்கக் கூடாது. அவர்கள் நீதிக்கு முன் கொண்டு வரப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
நமது நாட்டில் பல்வேறு முக்கிய நகரங்களில் நடந்துள்ள பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னால் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படும் நிலையில் இஸ்லாமாபாத் குண்டு வெடிப்பிற்கு மன்மோகன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.