நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு நல்லுறவு அவசியம்: பிரணாப்!
சனி, 20 செப்டம்பர் 2008 (18:33 IST)
இந்தியாவின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளின் நல்லுறவும், அமைதியும் அவசியம் என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
இதுகுறித்துக் கொல்கத்தாவில் நடந்த வங்காள தேசிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் ஆண்டு மாநாட்டில் பேசிய அவர், இந்தியாவின் நிலையான வளர்ச்சிக்கு 10 முதல் 15 ஆண்டுகளுக்குத் தொல்லையில்லாத சூழல் தேவை என்றார்.
நமக்கும் நமது அண்டை நாடுகளுக்கும் இடையில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கலாம். எல்லா விடயங்களிலும் நம்முடன் ஒத்துப்போக இறையாண்மை உள்ள எந்த நாடும் சம்மதிக்காமல் போகலாம். ஆனால், நாம் நமது அண்டை நாடுகளுடன் அமைதியான நல்லுறவை வளர்ப்போம் என்றார் அவர்.
எரிசக்தி பாதுகாப்பு, உணவு ஆகிய இரண்டும்தான் நமக்கு முன்பு உள்ள முக்கியச் சவால் என்று குறிப்பிட்ட பிரணாப், உணவு நிலையைப் பொருத்தவரை இந்த ஆண்டு நம்மிடம் போதுமான கையிருப்பு உள்ளது என்றார்.