புதிய எரிசக்தி கொள்கையில் விலை நிர்ணயத்திற்கு முக்கியத்துவம்: பிரதமர்!
சனி, 20 செப்டம்பர் 2008 (14:07 IST)
நாம் நமது எரிபொருள் தேவையில் பெரும்பகுதிக்கு அன்னிய நாடுகளைச் சார்ந்துள்ளதால், சர்வதேச சந்தைகளில் ஏற்படும் நிலையற்ற தன்மைக்கு நாம் பலியாகிறோம் என்று எச்சரித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், அதைத் தடுக்க நமது புதிய எரிசக்திக் கொள்கையில் விலை நிர்ணயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், அயல்நாடுகளின் எண்ணெய் வளங்களைக் கண்டறிந்து அவற்றைப் பயன்படுத்தும் வாய்ப்புகளை நமது எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படுத்தித் தருவதன் மூலமும் விலை ஏற்றத்தைச் சமாளிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
கடந்த சில மாதங்களாக சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலையற்று இருப்பதால் இந்தியச் சந்தைகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், புதிய ஒருங்கிணைந்த எரிசக்திக் கொள்கை வரைவை மத்திய திட்டக் குழு உருவாக்கியுள்ளது.
இந்தக் கொள்கை வரைவின் மீது விவாதிப்பதற்கான திட்டக் குழு கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் தலைநகர் டெல்லியில் இன்று நடந்தது. எரிசக்தி அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே, பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் விலாஸ் முட்டெம்வார், திட்டக் குழுத் துணைத் தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா ஆகியோர் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங்,"புதிய எரிசக்திக் கொள்கை வரைவின் எல்லா அம்சங்களையும் உடனடியாக அமல்படுத்த முடியாது. இன்னும் விவாதிக்க வேண்டியுள்ளது" என்றார்.
நாம் நமது எரிபொருள் தேவையில் பெரும்பகுதிக்கு அன்னிய நாடுகளைச் சார்ந்துள்ளதால், சர்வதேச சந்தை விலைகளில் ஏற்படும் நிலையற்ற தன்மைக்கு நாம் பலியாகிறோம் என்று எச்சரித்த அவர், அதற்கேற்றவாறு நமது எரிசக்தி கொள்கையை மாற்றியமைக்க வேண்டும் என்றார்.
விலை நிர்ணயம், சர்வதேச நாடுகளின் எண்ணெய் வளங்களை ஒப்பந்த அடிப்படையில் நமது எண்ணெய் நிறுவனங்கள் கைப்பற்றி பயன்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு நமது எரிசக்திக் கொள்கையில் முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்றார் பிரதமர்.
இந்த மாத இறுதியில் அமெரிக்கா செல்லவுள்ள பிரதமர் மன்மோகன் சிங் இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் புதிய எரிசக்திக் கொள்கை தொடர்பாக விவாதிப்பதற்காக திட்டக் குழு கூட்டத்தை பிரதமர் கூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.