அணு ஆயுத சோதனை நடத்தினால் எதிர் நடவடிக்கை எடுக்க உரிமையுண்டு: அமெரிக்கா!

வெள்ளி, 19 செப்டம்பர் 2008 (12:38 IST)
அணு ஆயுத சோதனை நடத்த இந்தியாவிற்கு அதன் இறையாண்மை ரீதியான உரிமை உள்ளதுபோல, அதற்கு எதிர் நடவடிக்கை எடுக்கும் உரிமை அமெரிக்காவிற்கு உள்ளது என்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் அயலுறவு குழுவிற்கு அந்நாட்டு அயலுறவு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் அயலுறவு குழு உறுப்பினர்கள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பதிலளித்து அந்நாட்டு அயலுறவு அமைச்சகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான சார்புச் செயலர் வில்லியம் பர்ன்ஸ், “இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தினால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது, இந்த கேள்விக்கு எங்களுடைய சுருக்கமான பதில்: அணு ஆயுத சோதனை நடத்தும் உரிமை தங்களுடைய இறையாண்மைத் தொடர்பானது என்று இந்தியா கூறுகிறது, அதேபோல, அப்படிப்பட்ட சோதனை நடத்தப்பட்டால் அதற்குரிய பதில் நடவடிக்கை எடுக்கும் இறையாண்மை ரீதியான உரிமை நமக்கும் உண்டு என்பதே” என்று கூறியுள்ளார்.

“2005ஆம் ஆண்டு முதல் கடைபிடித்துவரும் தன்னிச்சையான சுய சோதனைத் தடையை தொடர்ந்து கடைபிடிப்போம் என்று 2006ஆம் ஆண்டு செப்டம்பரில் உறுதிமொழி அளித்துள்ளது. இதை மீறி இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தினால் அதற்கு பதிலடியாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்டும் என்றும். அது ஹென்றி ஹைட் சட்டத்தின் அடிப்படையில் நிறைவேற்றப்படும் என்றும் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அயலுறவு அமைச்சர் கோண்டலீசா ரைஸ் கூறியுள்ளார். எனவே தனது உறுதிமொழியை மீறினாலோ, பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தை மீறினாலோ இந்தியாவுடனான அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் முடிந்துவிடும்” என்று அந்த விளக்கத்தில் வில்லியம் பர்ன்ஸ் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்