நாட்டின் முக்கிய பகுதிகளில் திறன் மேம்பாட்டு மையங்கள்: ப சிதம்பரம்!
வெள்ளி, 19 செப்டம்பர் 2008 (12:36 IST)
பல்வேறு துறைகளிலும் தகுதி, திறமை வாய்ந்தவர்களை உருவாக்கும் வகையில் நாட்டின் முக்கிய பகுதிகளில் திறன் மேம்பாட்டு மையங்கள் திறக்கப்பட வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.
பல்வேறு துறைகளிலும் தகுதி, திறமை, அனுபவம் வாய்ந்தவர்களை உருவாக்கும் நோக்கில் தேசிய திறன் மேம்பாட்டு கழகம் (என்.எஸ்.டி.சி) என்ற நிறுவனத்தை மத்திய நிதியமைச்சகம் அமைத்துள்ளது.
இதன் நிர்வாகக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், எல்லா துறைகளிலும் தகுதி, திறமை, அனுபவம் வாய்ந்தவர்களுக்கு நல்ல வரவேற்பும் பிரகாசமான எதிர்காலமும் உள்ளது. தகுதி, திறமையுடன் துறையில் போதிய அனுபவம் வாய்ந்தவர்களை நாம் அதிகளவில் உருவாக்க வேண்டும்.
அவர்கள் முழு திறமையுடனும் சர்வதேச தரத்திலான தகுதி, அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு நாட்டின் முக்கிய நகரங்களில் தேசிய திறன் மேம்பாட்டு மையங்களை 2009ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் அதிகளவில் அமைத்து முழு வீச்சில் செயல்படத் தொடங்க வேண்டும்.
இந்திய பொருளாதாரத்துக்கேற்ப மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் தேவையை சமாளிக்கும் வகையில் திறமையானவர்களை நாம் உருவாக்க வேண்டும். இதற்கு நிதி ஒரு தடையாக இருக்காது.
திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கு 2008-09ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு ரூ.1,000 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த நிதி சில ஆண்டுகளில் ரூ.15,000 கோடி என்ற அளவில் உயர வேண்டும் என்பதை நோக்கமாக வைத்து செயல்பட வேண்டும் என்று ப சிதம்பரம் கூறினார்.