சந்திராயன்-2 திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்!

வியாழன், 18 செப்டம்பர் 2008 (17:37 IST)
சந்திரனை ஆய்வு செய்வதற்காக வரும் 2011-12ஆம் ஆண்டில் விண்ணில் ஏவத் திட்டமிட்டுள்ள சந்திராயன்-2 ஆய்வுக்கலத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இத்திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.425 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாகவும் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி தெரிவித்தார்.

சந்திரனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ தயாரித்துள்ள சந்திராயன்-1 ஆய்வுக்கலம் அடுத்த மாதம் விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில், இதன் அடுத்தகட்ட ஆய்வாக கருதப்படும் சந்திராயன்-2 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மன்மோகன்சிங் அரசுமுறைப் பயணமாக கடந்தாண்டு நவம்பரில் ரஷ்யா சென்றிருந்த போது, சந்திராயன்-2 திட்டத்தை ரஷ்யாவின் கூட்டு ஒத்துழைப்புடன் செயல்படுத்த இந்தியாவின் இஸ்ரோ (ISRO), ரஷ்யாவின் ரோஸ்கோமோஸ் (Roskosmos- Russian Federal Space Agency) இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்