கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் பிரச்சனை காரணமாக, மராட்யத்தைச் சேர்ந்த விவசாயி சோனியா காந்தி, சரத் பவார் உட்பட 15 முக்கியப் பிரமுகர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
அகோலா என்ற ஊரைச் சேர்ந்த விவசாயி திலிப் காடோலே என்பவர் தனது தந்தை ஷாலிகிராம் கடோலேயின் தற்கொலைக்கு, மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார், ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் உட்பட 15 நபர்கள் வகுத்த கொள்கைகளே காரணம் என்று தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
அகோலா மாவட்ட நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு குறித்து கடோலேயின் வழக்கறிஞர் பிரகாஷ் அம்பேத்கர் கூறுகையில், பெரும்பால விவசாய சமூகத்தினர் மத்திய அரசின் இறக்குமதி கொள்கையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர், இதனால் இவர்களின் பருத்திக்கு நல்ல விலை கிடைக்கவில்லை என்றார்.
கடன் தொல்லையால் திலிப் கடோலேயின் தந்தை தற்கொலை செய்து கொண்டதையடுத்து அவர் வைத்து விட்டுப்போன ரூ.1 லட்சம் கடனை அடைக்க திலிப் கடோலேயும் அவரது தாயார் கௌஷல்யாபாயும் கடுமையாக போராடி வருகின்றனர்.
ஆனால் எதிர்கட்சி வழக்கறிஞர் இந்த வழக்கு குறித்து கூறுகையில், அரசின் கொள்கைகளை எதிர்த்து இந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது, இது நாடாளுமன்றத்தில் எழுப்பபட வேண்டும் அல்லது உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்றார்.
இந்த வழக்கு விசாரணை இம்மாதம் 26-ம் தேதி நடைபெறுகிறது.