புகையிலைப் பொருட்களைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை: அன்புமணி!

செவ்வாய், 16 செப்டம்பர் 2008 (19:17 IST)
புகையிலைப் பொருட்களைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடு‌க்க‌ப்ப‌ட்டு வருவதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

புதுடெ‌ல்‌லி‌யி‌ல் இன்று சட்ட விரோதமான புகையிலைப் பொருட்கள் வர்த்தகம் குறித்த மண்டல கருத்தரங்கினை துவ‌க்‌கி வை‌த்து‌ப் பே‌சிய அவ‌ர், புகையிலைப் பொருட்களுக்கு வசூலிக்கப்படும் தீர்வைத்தொகையை, புகையிலைக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த உத்தேசிப்பதாகவு‌ம் தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் ரூ.500 கோடிக்கும் அதிகமான நிதி இந்த தீர்வை மூலம் பெறப்படுகிறது என்றும் இந்த நிதியை புகையிலைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு இயக்கங்கள், மாற்றுப்பயிர், சோதனைச் சாலைகளை அமைத்தல், புகையிலைப் பயிரிடுவோருக்கு மாற்று வேலைவாய்ப்பு ஆகியவைகளுக்காக செலவிடலாம் என்றும் இது தொடர்பாக பிரதமருக்கும், நிதி அமைச்சருக்கும் கடிதம் எழுத இருப்பதாகவு‌ம் கூ‌றினா‌ர்.

உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கை உடைய தென்கிழக்கு ஆசிய பிராந்தியம் புகையிலை நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் பிராந்தியத்திலுள்ள நாடுகள் பல்வேறு சர்வதேச சுகாதார அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயலாற்றுகின்றன. இந்தியா உலகளவில் புகையிலைக்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்த முழு ஒத்துழைப்பு அளிக்கும்.

புகையிலைப் பொருட்களின் சட்டவிரோதமான வர்த்தகமானது, அரசு,வரிகள் மூலம் நிதி திரட்டி சமுதாயத்திற்கு பலனளிக்கும் திட்டங்களில் முதலீடு செய்வதை குலைக்கிறது. புகையிலைப் பொருட்களை மலிவான விலையில் விற்க முடிவதால் புகையிலை வினியோகத்தை கட்டுப்படுத்துவதும் கடினமாகிறது.

உலக சுகாதார அமைப்பின் புகையிலை கட்டுப்பாட்டு அமைப்பு, நமது நாட்டில் கட்டுப்பாட்டு முயற்சிகளை ஊக்குவிக்கிறது. இந்தியா உலக சுகாதார நிறுவனத்தின் இந்த முயற்சிகளை துவக்கத்திலிருந்தே ஆதரித்து வருகிறது. இந்த கருத்தரங்கு புகையிலைப் பொருட்களின் சட்டவிரோதமான வர்த்தகம் தொடர்பான முன்வரைவு பிரகடனத்தை ஆய்வு செய்யவுள்ளது. இந்த பிரகடனம் அடுத்த மாதம் மூன்றாவது வாரத்தில் ஜெனீவாவில் நடைபெறும் கூட்டத்தில் திரும்பவும் விவாதிக்கப்படும் எ‌ன்று அன்புமணி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்