எதிர்வரும் மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெறும். அடுத்த பிரதமராக அத்வானி பொறுப்பேற்பது உறுதி என்று பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம், கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் நேற்று தொடங்கியது. மூன்று நாட்களுக்கு நடைபெறும் இக்கூட்டத்தில் தேசிய அளவில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து செயற்குழு உறுப்பினர்கள் விவாதிக்கின்றனர்.
செயற்குழு கூட்டத்தை தொடங்கி வைத்து கட்சித் தலைவர் ராஜ்நாத்சிங் பேசியதாவது:
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் மத்திய அரசு நாடாளுமன்றத்தையும், மக்களையும் தவறாக வழிநடத்தியுள்ளது. இதற்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும். இவ்விவாகரத்தில் நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் விஷயங்களை மட்டுமே பாஜக எதிர்க்கிறது. அணுசக்தி ஒப்பந்தத்தையோ, அமெரிக்கிஆவுடனான உறவையோ எதிர்க்கவில்லை.
விலைவாசி உயர்வு, பணவீக்க உயர்வு உள்ளிட்ட விஷயங்களில் மத்திய அரசு தோல்வியடைந்துவிட்டது. தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் மத்திய அரசு மென்மையானப்போக்கை கடைபிடிக்கிறது.
இந்துக் கலாச்சாரத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது. வடக்கில் அமர்நாத் விவகாரம் தொடங்கி, தெற்கில் ராமர் பாலம் வரை கலாச்சாரச் சின்னங்கள் பாதுகாக்கப்படவில்லை.
வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைச் சந்திக்கும். பாஜக வெற்றி பெற்று அத்வானி பிரதமராவது உறுதி. இதற்காக பாஜக தொண்டர்கள் கடுமையாக உழைக்கத் தயாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசினார்.
அத்வானிக்க்கு வாஜ்பாய் ஆதரவு: உடல்நிலை பாதிப்பு காரணமாக முன்னாள் பிரதமரும் மூத்த தலைவருமான ஏ.பி.வாஜ்பாய் பாஜக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
எனினும் இக்கூட்டத்திற்கு அவர் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். அதில், அத்வானியை பிரதமராக்குவதே கட்சித் தொண்டர்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும். இதற்காக அர்பணிப்பு உணர்வுடன் அனைவரும் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.