எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் தற்கொலை!
திங்கள், 8 செப்டம்பர் 2008 (16:59 IST)
காஷ்மீர் பள்ளத்தாக்கில் பணியில் இருந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
எல்லையோர மாவட்டமான குப்வாராவில் உள்ள 27 ஆவது பட்டாலியன் எல்லைப் பாதுகாப்புப் படை முகாமில் நேற்றிரவு துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டுள்ளது.
இதையடுத்து வீரர்கள் எச்சரிக்கையுடன் சத்தம் வந்த இடத்திற்குச் சென்று பார்த்தபோது, தலைமைக் காவலர் சன்டானோ குமார் சிங் என்பவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டது தெரியவந்தது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர், அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்வதற்கு முன்பே இறந்துவிட்டார்.
அவர் ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்பது பற்றிய விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எல்லைப் பாதுகாப்புப் படையில் பணிபுரியும் வீரர்கள், மன அழுத்தத்தில் இருந்து விடுபட வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கு யோகா, வாழும் கலைப் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இருந்தாலும், வீரர்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்து வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் 30 க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர், தற்கொலை செய்துகொண்டோ அல்லது உடன் பணியாற்றும் வீரர்களால் சுடப்பட்டோ இறந்துள்ளனர்.
பாதுகாப்புப் படையினர் தற்கொலை செய்துகொள்வதற்கு பணித் தன்மையும், குடும்பச் சிக்கல்களும் முக்கியக் காரணங்களாகக் கருதப்படுகிறது.