என்.எஸ்.ஜி.விலக்கு: பிரதமர் மகிழ்ச்சி!

சனி, 6 செப்டம்பர் 2008 (18:37 IST)
அணு சக்தி தொழில்நுட்ப நாடுகளுடன் வணிகம் செய்ய அனுமதி அளித்து இந்தியாவிற்கு அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழு (என்.எஸ்.ஜி.) வழங்கியுள்ள விலக்கு (Waiver) முற்போக்கானது, குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்று பிரதமர் மன்மோகன் சிங் வர்ணித்துள்ளார்.

அணு சக்தி தொழில்நுட்பத்துறையில் கடந்த 34 ஆண்டுகளாக தனிமை படுத்தப்பட்டுக் கிடந்த இந்தியா, அணு ஆயுத பரவல் தடுப்புக் கொள்கையில் கடைபிடித்த உறுதியான நிலைக்கு கிடைத்த அங்கீகாரம் இது என்று பிரதமர் கூறியுள்ளார்.

இந்தியாவிற்கு ஒருமித்த கருத்துடன் என்.எஸ்.ஜி.(Nuclear Suppliers Group-NSG) விலக்கு அளித்த செய்தி கிட்டியதும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர், அவருக்கு நன்றி தெரிவித்தார்.

சர்வதேச அணு சக்தி நாடுகளுடன் இந்தியா மேற்கொள்ளவிருக்கும் இந்த அணு சக்தி ஒத்துழைப்பு இந்தியாவிற்கு மட்டுமின்றி உலகிற்கு நன்மை பயப்பதாக இருக்கும் என்று கூறியுள்ள மன்மோகன் சிங், இதன் மூலம் எரிசக்தி பாதுகாப்பிலும், வானிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளிலும் சர்வதேச அளவில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று கூறியுள்ளார்.

இந்தியாவிற்கு விலக்கு அளிக்கும் முடிவு என்.எஸ்.ஜி.யின் குறிப்பிடத்தக்க ஒரு சிறந்த முடிவு என்று அவ்வமைப்பின் அமெரிக்க பிரதிநிதி ஜான் ரூட் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்